துருக்கி: தென்கிழக்கு துருக்கியில் இன்று (பிப்.6) காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவாகி உள்ளதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காஜியாம்தெப்பில் 33 கிலோ மீட்டர் சுற்றளவிலும், நுர்தாகியில் 26 கிலோ மீட்டர் சுற்றளவிலும், நகரின் மத்தியில் 18 கிலோ மீட்டர் சுற்றளவிலும் ஏற்பட்டதாக யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் கஹ்ராமன்மாரஸ் மாகாணத்தில் உள்ள பஜாரிக் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.4ஆக பதிவாகி இருப்பதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மலத்யா மாகாணத்தின் தியார்பகில் மற்றும் மலத்யாவில் உள்ள பல்வேரு கட்டடங்கள் சீட்டு கட்டுபோல் இடிந்து விழுந்தன.
மலத்யா மாகாணத்தில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வானுயர் கட்டடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கியது கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடப்பவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அட்மட் நகரில் மட்டும் 10 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏறத்தாழ 195 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதா என்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
துருக்கியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிடரால் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்தன. மேலும் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிர் தப்பிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அண்டை நாடுகளான லெபானன், சிரியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிலும், சிரியாவில் உள்ள அலெப்போவிலின் வடக்கு நகரம் மற்றும் ஹமாவின் மத்திய நகரம் போன்ற இடங்களில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் (Syria’s state media) தெரிவிக்கின்றன.
துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் நில நடுக்கத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹாமாஸ் மற்றும் டமாஸ்கஸ் பகுதியில் சில மணித்துளிகள் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் உயிரை தற்காத்துக் கொள்ள சாலைகளில் தஞ்சமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
லெபனானில் 40 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில், வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்வின் காரணமாக விழுந்து நொறுங்கின. லெபானானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.! ஒருவர் பலி