சனா : உள்நாட்டு போரால் ஏமன் அரசு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அரசை நீக்கி விட்டு ஹவுதி படை ஆட்சியை கைப்பற்றியது. ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் பழையை ஆட்சியை மீண்டும் கொண்டு வர சில கிளர்ச்சி படைகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கலுக்கு சவுதி அரேபியா அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இப்படி உள்நாட்டு பிரச்சினையில் ஏமன் நாடு சிக்கி சின்னாபின்னமாகி காட்சி அளிக்கிறது.
அந்நாட்டில் பெருவாரியான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ரமலான் நோன்பை முன்னிட்டு தலைநகர் சனாவில் உள்ள பாப் அல் ஏமன் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள பள்ளியில் விழாவை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், நிதி உதவி பெற ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டு வந்தனர்.
இதையும் படிங்க : UNFPA: உலக மக்கள்தொகையில் நம்பர் ஒன்.. இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்?
இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் திரண்ட மக்கள் ஒருவருடன் ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 85 பேர் உயிரிழந்தனர். மேலும் 320க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பள்ளியில் நடைபெற்ற நிதி உதவி விழாவில் பொது மக்களுக்கு 5 ஆயிரம் ஏமனி ரியால் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் உள்ளூர் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் மற்றும் ஒத்துழைப்பு வழங்காததே இந்த பேரிடருக்கான முக்கியக் காரணம் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சி கும்பல், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் அதனால் பதறிப் போன பொது மக்கள் சிதறி ஓடியதும் இந்த துயர சம்பவத்திற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 300க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி - வெள்ளை மாளிகை!