அண்டனானரிவோ [மடகாஸ்கர்] : மடகாஸ்கரின் தேசிய மைதானமான பரியா மைதானத்துக்குள் நுழைய முயன்ற விளையாட்டு ரசிகர்கள் 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாயினர். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை காண வந்த பார்வையாளர்களை இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அண்டனானரிவோவில் அமைந்துள்ளது பரியா மைதானம். இந்த மைதானத்தில் நேற்று (25.08.2023) இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
பார்வையாளர்கள் அனைவரும் பரியா மைதானத்தின் நுழைவாயிலில் கூடியிருந்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முற்பட்டபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில், விழாவை காண வந்த ரசிகர்கள் சிக்கினர். இதில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், கூறப்படுகிறது. இதனால் விழாவை காணவந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இது குறித்து அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே கூறுகையில், “ தற்காலிக எண்ணிக்கையின்படி 12 பேர் உயிரிழந்துள்ளனர், 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டு மடகாஸ்கரில் செப்டம்பர் 3 வரை நடைபெறும். இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அவை 1977 இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) உருவாக்கப்பட்டது. மேலும் இதில் மொரிஷியஸ், சீஷெல்ஸ், கொமொரோஸ், மடகாஸ்கர், மயோட், ரீயூனியன் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்ட மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றின் உரையாடலில் பேசிய அவர், “கூட்ட நெரிசலால் இத்தகைய சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நுழைவாயிலில் மக்களுக்கு காயங்கள் மற்றும் இறப்புகள் இருந்தன” என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நெரிசலில் காணாமல் போன பொருட்களுக்கு இடையே குவிந்திருந்த தங்களது காலணிகள், மற்றும் பொருட்களை மக்கள் கண்டுபிடிக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பான மற்ற படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. 2019 இல் மஹாமசினா மைதானத்தில் ஏற்பட்ட இதேபோன்ற ஒரு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.