கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அன்றாட தேவைகளான உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. எனவே, அதன் விலைகளும் உச்சத்தை தொட்டுள்ளன. அமெரிக்கா, அண்டை நாடான இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வந்தாலும், மக்கள் தினந்தினம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பல கிலோ மீட்டர் தூரம் வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் இரவு பகல் பாராமல் வரிசையில் நிற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாகனங்களுக்கு மட்டுமின்றி அங்குள்ள சில தொழிற்சாலைகளுக்கும் எரிபொருள்களின் தேவை உள்ளது.
ஏற்றுமதியில் சிக்கல்: இந்நிலையில், அடுத்த 5 நாள்களுக்கான எரிபொருள்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது என இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விற்பனையாளர்களுக்கு 725 மில்லியன் டாலர் கடன் பாக்கி உள்ளது என்றும் எதிர்கால ஏற்றுமதி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசு எரிபொருளுக்காக 500 மில்லியன் டாலர் கடன் தர முன்வந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக இலங்கை காத்திருக்கிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கொழும்புவில் நீண்ட நேரம் வரிசையில் நின்ற 53 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாரப்படைப்பால் உயிரிழந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர் கதையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையிலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் இலங்கை விமானங்கள்!