ஏதென்ஸ்: போலந்தில் இருந்து புறப்பட்ட ரயனெர்(Ryanair) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. போலந்தின் கடோவீஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயனெர் FR6385 என்ற விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
அப்போது கிரீஸ் வான்பரப்பில் பறந்த ரயனெர் விமானத்திற்கு கிரீஸ் விமானப்படையின் இரண்டு எஃப்-16 போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கின. தொடர்ந்து ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் விமானம் தரையிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 190 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவு பாதுகாப்பு படையினர் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தனர். இதில் பயணிகளிடம் இருந்தோ, விமானத்தில் இருந்தோ வெடிக்கக் கூடிய பொருட்கள் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த தகவல்கள் தெரிய வராத நிலையில், போலாந்து விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டதுமே மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், கிரீஸ் வான்பரப்பில் நுழைவதற்கு முன் வரை விமானத்திற்கு ஹங்கேரி விமானப்படை பாதுகாப்பு வழங்கி ரோந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு.. அமெரிக்காவில் 10 பேர் படுகொலை..