மாஸ்கோ : உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, தம் சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. வடக்கு அட்லாண்ட் ஒப்பந்த அமைப்பான நேட்டோ படையில் சேர விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் உக்ரைன் மீது அதிருப்தி கொண்ட ரஷ்யா, கடந்த ஆண்டு 2022 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.
ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு, இரண்டு மாதங்களாகும் நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்து வருகின்றது. மேலும் அப்பாவி மக்கள், பலர் இந்த ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.
உக்ரைனில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகளை ரஷ்ய வீரர்கள் தேடித் தேடி அழித்ததாக அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீதும் அந்நாட்டு அதிபர் புதின், ரஷ்ய நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீதும் விதித்தன.
மறுபுறம் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. அண்மையில் பக்முத் நகரின் பெரும் பகுதியை கைப்பற்றி விட்டதாகவும், ஸ்லோவியான்ஸ்க் நகரையும் கைப்பற்ற ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் ரஷ்யா தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சொந்த நகரத்தின் மீதே ரஷ்யா வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் உள்ள பெல்கோராட் நகரத்தின் மீது ரஷ்யப்போர் விமானம் குண்டு வீசி உள்ளது. இந்த நகரம் உக்ரைன் எல்லைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தவறுதலாக இந்த குண்டு வீசப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய ராணுவத்தின் Su-34 வகை Bomber போர் விமானம் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பல்வேறு கட்டடங்களில் விரிசலும், 60 அடிக்கு பள்ளமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பெல்கோராட் நகரத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, உக்ரைன் ராணுவத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமா என அச்சத்தில் அந்நகர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த நாட்டு ராணுவத்தாலேயே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்நகர மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம் தாக்குதல் தற்செயலாக நடந்தது என்றும், திட்டமிடப்பட்டது இல்லை என்றும் ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : PM Modi : ரத்தாகிறதா பிரதமர் மோடியின் கேரளா பயணம்? உளவுத் துறை கூறுவது என்ன?