இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று(ஜன.29) பலோச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து 48 பயணிகளுடன் பேருந்து ஒன்று, கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. லாஸ்பேலா என்ற இடத்தில் வளைந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தூணில் மோதிய பேருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படையினர் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரு குழந்தை, ஒரு பெண்மணி உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்ததாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்து அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் மர்ம நோய் பரவல்.. குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு...