வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ட்ரான்ஸ்மெடிக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கல்லீரலின் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தினர். குறிப்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எத்தனை ஆண்டுகளுக்கு ஆரோக்கியமாகவும், நல்ல செயல்திறனுடனும் இருக்கிறது? அதன் ஆயுள்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
1990ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்ட 2 லட்சத்து 53 ஆயிரத்து 406 பேரின் கல்லீரல்களின் நிலையை ஆய்வு செய்தனர். அதில் 25 கல்லீரல்கள், 100 ஆண்டுகளைக் கடந்தும் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. ட்ரான்ஸ்பிளான்ட் செய்வதற்கு முன்பு, அதற்கு பின்பு என மொத்தமாக 100 ஆண்டுகளுக்கும் மேல் இந்த கல்லீரல்கள் செயல்படுகின்றன.
இதில் கல்லீரலை நன்கொடையாக வழங்கியவர் மற்றும் பெற்றவரின் உடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளை கடந்தும் செயல்படும் இந்த கல்லீரல்கள் பெரும்பாலும், வயது முதிர்ந்தவர்கள் கொடையாக வழங்கியவை என்றும், அந்த கொடையாளர்களின் வயது சராசரியாக 85 ஆக இருந்தது- அவர்களுக்கு பெரிய அளவிலான நோய்த்தொற்று ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சென்சுரியன் கல்லீரல்களை வழங்கியவர்களிடம் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை அறிந்தால், கூடுதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவியாக இருக்கும் என்றும், 2022 செப்டம்பர் மாத நிலவரப்படி 11,113 நோயாளிகள் கல்லீரம் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கல்லீரல் நம்ப முடியாத அளவுக்கு மீள்திறன் கொண்ட உறுப்பு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மூன்றாம் நிலை புகைத்தலால் தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் - ஆய்வில் தகவல்