கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில், மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மாளிகை முழுவதுமாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு சென்ற நிலையில், பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் சட்டப்படி பிரதமராக உள்ள ரணில் விக்கரமசிங்கே இடைக்கால அதிபராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. புதிய அதிபருக்கான போட்டியில் இடைக்கால அதிபர் ரணில் விக்கரமசிங்கே, ஆளும் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளரான டலஸ் அழகப்பெரும, இடதுசாரி அனுர குமார திசநாயக்கே, ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிபராக 113 பேரின் ஆதரவை பெற வேண்டும். மேலும், உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதிபரை தங்களின் வாக்கை பதிவுசெய்தனர். இதில், 223 எம்.பிக்கள் இன்று வாக்களித்தனர்.
இந்நிலையில், 134 வாக்குகளை பெற்று இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அதிபர் நாடாளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது கடந்த 44 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் தேர்வான அதிபர்கள் மக்களால் நேரடியாக தேர்வானார்கள்.
இந்த காலகட்டங்களில், 1993ஆம் ஆண்டு ரணசிங்கே பிரேமதேசா கொல்லப்பட்டபோது மட்டும்தான் அதிபர் பதவி காலியாக இருந்ததது. அப்போது, டி.பி.விஜேதுங்க, பிரேமதாசாவின் பதவிக்காலம் முழுவதும் ஆட்சிசெய்ய ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
ரணிலை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளை பெற்றார் எனவும், அதில் 4 வாக்குகள் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திசநாயக்கே 3 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
தற்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, 2024 நவம்பரில் கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சிக்காலம் நிறைவடையும் வரை பதவி வகிப்பார். இலங்கை நாடாளுமன்றம் வரும் ஜூலை 27ஆம் தேதி மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Exclusive: “இலங்கையின் தற்போதைய நெருக்கடி உள்நாட்டுப் போரை விட மோசமானது ”- இலங்கை கப்பல் நிறுவன முன்னாள் தலைவர்