சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட்டில் இன்று (செப் 16) தொடங்கியது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய உலக தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் சந்தித்தனர்.
அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது காதில் ஹெட்போன் பொருத்த படாதபாடுகிறார். ஒரு கட்டத்தில் ஹெட்போன் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது. அப்போது எதிரே இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குழந்தை போல குபீரென சிரித்துள்ளார். அதோடு பொறுமை, ஒன்றும் அவசரமில்லை என்று அவரை நிதானப் படுத்துகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சந்திப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமர்கண்ட் மாநாட்டில் கலந்துகொண்டது பலனளிக்கும் நாளாக இருந்தது. எங்கள் நட்பு நாடுகளின் தலைவர்களுடனான எனது சந்திப்புகளில், வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை அளிக்க ஒப்புக்கொண்டோம். பாகிஸ்தான் நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினேன். உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை எங்களுக்கு உண்மையான சவாலாக உள்ளதை தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நுகர்வோர் பயன்பாட்டில் வளர்ச்சி அடைந்த சீனா