ஸ்டாக்ஹோம்(ஸ்வீடன்): 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று(அக்.3) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்க விஞ்ஞானி ஜான் எஃப் கிளாசர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் ஸீலிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.