சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியது முதல் ஊழியர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் எலான் மஸ்க் தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளை வழங்கி வருகிறார்.
ப்ளூ டிக் பெற மாதந்தோறும் சந்தா, ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நீக்கம், முன்னறிவிப்பின்றி ஒப்பந்த பணியாளர் வெளியேற்றம் என எலான் மஸ்க் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார்.
ட்விட்டர் 2.o திட்டத்தை உருவாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். வரும் காலங்களில் ட்விட்டர் ஊழியர்கள் கடினமான பணிச்சுமைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் விரும்பாதவர்கள் ராஜினாமா செய்து விட்டு வெளியேறலாம் என்றும் எலான் மஸ்க் இமெயில் மூலம் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.
நேற்று (நவ. 17) மாலை வரை ட்விட்டரை விட்டு வெளியேற விரும்பும் ஊழியர்கள் ராஜினாமா செய்யலாம் என எலான் மஸ்க் காலக்கெடு விதித்தார். இதையடுத்து மெகா பணிநீக்கத்திற்கு பின் ஏற்த்தாழ 3 ஆயிரம் ஊழியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்களை அடுத்து வரும் 21 ஆம் தேதி வரை ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் மூடப்படும் என ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் எலான் மஸ்க்கும் அடுத்த வாரம் வரை ட்விட்டர் அலுவலகங்களை மூட உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஊழியர்கள் ராஜினாமா குறித்து ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், சிறந்த மனிதர்கள் ட்விட்டரில் தொடர்வதால், வெளியேறுபவர்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் ராஜினாமாவை அடுத்து ட்விட்டரில் #RIP Twitter என்ற ஹெஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: காசாவில் தீ விபத்து - 21 பேர் உயிரிழப்பு