கைரோ : கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு கப்பல் சுயஸ் கால்வாயில் ஒற்றை பாதை அருகே பழுதாகி நின்றதால் மற்ற கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எகிப்து நாட்டில் உள்ள சுயஸ் கால்வாய் முற்றிலும் மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட செயற்கை கால்வாயாகும். மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைக்கு முக்கிய கடல் வழியாக காணப்படும் இந்த சுயேஸ் கால்வாய் 193 கிலோ மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகளும் கொண்டது.
கடந்த 1869ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்ட இந்த கால்வாய் ஆசிய - ஐரோப்பியா இடையிலான முக்கிய கடல் வழிப் போக்குவரத்து பாதையாக காணப்படுகிறது. இந்த சுயஸ் கால்வாய் வழியாக பயணிக்கும் போது ஆசியா - ஐரோப்பியா இடையிலான போக்குவரத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் மிச்சப்படுவதாக கூறப்படுகிறது.
ஆசியா - ஐரோப்பியா இடையில் முக்கிய கடல் வழித்தடமாக இந்த சுயஸ் கால்வாய் திகழ்கிறது. இந்த கால்வாய் இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்க நாடுகள் வழியாக சுற்றி ஆசியா நாடுகளை அடைய வேண்டிய சூழல் இருந்தது. தற்போது இந்த சுயஸ் கால்வாய் வழியாக இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அங்கிருந்து ஆசிய நாடுகளுக்கும் கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கடல் மார்க்கமாக வணிகம் செய்யப்பட்டு வருகின்றன.
அப்படி பரபரப்புமிக்க இந்த சுயஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு கப்பல் திடீரென பழுதாகி நின்றது. மால்டா நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பல், சுயஸ் கால்வியின் ஒற்றை வழிப்பாதையில் திடீரென பழுதாகி நின்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதையை அடைத்துக் கொண்டு சரக்கு கப்பல் நின்றதால் ஏறத்தாழ 8 கப்பல்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து சுயஸ் கால்வாயை நிர்வகிக்கும் குழு மூன்று இழுவை படகுகளை கொண்டு பழுதான மால்டா நாட்டு கொடி பொருத்திய சீவிகோர் (Seavigour) கப்பலை பாதையை விட்டு இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் பாதை சீரமைக்கப்பட்ட நிலையில், வழக்கம் போல் கப்பல்கள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மத்திய தரைக் கடல் மற்றும் செங்கடல் பகுதியை இணைக்கும் வடக்கு கான்வாய் பகுதியில் கப்பல் பழுதாகி நின்றதாகவும், ஒற்றை வழிப்ப்பாதையில் நின்றதால் மேற்கொண்டு கப்பல்கள் செல்ல முடியாமல் 8 கப்பல்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாகவும் சுயஸ் கால்வியின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து இழுவை கப்பல்கள் உதவியுடன் மால்டா நாட்டு கப்பல் இரட்டை வழிப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கப்பலை பழுது நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். மால்டா நாட்டின் கொடி பொருத்திய சீவிகோர் படகு 2016ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது என்றும் 274 மீட்டர் நீளம் மற்றும் 48 புள்ளி 63 மீட்டர் அகலம் என்றும் கடல்வழி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க : கொல்காத்தா - ஒடிசா இடையே இலவச பேருந்து.. ரயில் போக்குவரத்து சீராகும் வரை உத்தரவு!