லண்டன்: பிரிட்டனை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச செய்தி நிறுவனமான 'பிபிசி டூ', "India: The Modi Question" என்ற புதிய தொடரை தொடங்கியுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்சினை, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து இந்த தொடர் ஆராய்கிறது.
இந்த தொடரின் முதல் எபிசோட் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், பிபிசியின் இந்த புதிய தொடர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராமி ரேஞ்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராமி ரேஞ்சர், பிபிசியின் இந்த தொடர் ஒருதலைப் பட்சமாக இருப்பதாகவும், இது லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடியையும், இந்தியாவின் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என்றும், இந்த பாரபட்சமான தொடரை கண்டிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் பிபிசியின் இந்த தொடருக்கு ட்விட்டரில் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"India: The Modi Question" -க்கு பதிலாக "UK: The Churchill Question" என்ற தொடரை தொடங்கலாம் என்றும், அதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறித்து ஆய்வு செய்யுங்கள் என்றும் கூறி வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் பிரிட்டனின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தொலைகாட்சித் தொடர் இயக்க விருப்பம் - ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்