ஜப்பான்: ஜப்பானின் புகுஷிமா நகரில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக புகுஷிமா டாய்ச்சி அணு உலை பாதிப்புக்குள்ளானது. அணு உலையில் இருந்த குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததால், வெப்பம் அதிகரித்து அணுக்கசிவு ஏற்பட்டது. இதனால், கதிர்வீச்சு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
கதிர்வீச்சை தடுக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும் ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், பத்து ஆண்டுகள் கடந்தும், புகுஷிமா அணு உலைக் கசிவால் வெளியான கதிர்வீச்சின் தாக்கம் குறையவில்லை. இதனால், அணு உலையை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அணு உலையில் கதிர்வீச்சைக் குறைக்க பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படது. அந்த நீர் கதிர்வீச்சு கலந்த கழிவுநீராக மாறியதால், அதனை அணு உலையிலேயே சேமித்து வைத்தனர். அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றால், இந்த கதிர்வீச்சு நிறைந்த கழிவுநீரை பசிபில் பெருங்கடலில் கலப்பதைத் தவிர வேறு வழியில்லை என கடந்த 2021ஆம் ஆண்டு ஜப்பான் அரசு அறிவித்தது.
கதிர்வீச்சு நிறைந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே கடலில் கலக்கப்படும் என்றும், கழிவுநீரை கடலில் கலக்கும் பணிகள் 2023ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சுழலியல் ஆர்வலர்கள், மீனவ மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சுத்திகரிக்கப்பட்ட அணு உலைக் கழிவுநீர் கடலில் கலக்கும் பணிகள் இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கடலில் திறந்துவிட உள்ளதாக புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையம் மற்றும் டெப்கோ(TEPCO) நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், 31,200 டன் கழிவுநீரை கடலில் திறந்துவிட டெப்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜப்பானிய மீனவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கையை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது.
கதிர்வீச்சு நீக்கப்பட்ட பிறகே கழிவுநீர் கடலில் கலக்கப்படும் என்றும், அதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் ஐப்பான் அரசு தெரிவித்தது. ஆனால், சுத்திகரித்தாலும் கழிவுநீரில் உள்ள டிரிட்டியத்தை முழுமையாக நீக்க முடியாது என்றும், அதற்கான தொழில்நுட்பமே உலகில் இல்லை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்களிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடலில் கலக்கப்படும் புகுஷிமா கதிரியக்க நீர் - உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து