சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. அதுமட்டுமின்றி தலைநகரான சென்னையும் பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட டிபி சத்திரம் பகுதி மக்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து அரிசி, பருப்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை தவெக தலைவரும், நடிகருமான விஜய் வழங்கினார்.
அந்த சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்கள் வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், நேரில் வந்தால் உங்களுடன் அமர்ந்து பாதிப்புகளை பற்றி இயல்பாக பேச முடியாது. அதனால் தான் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண பொருட்கள் வழங்கினேன் என விளக்கமளித்தார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெற்றது.
இதையும் படிங்க : வெள்ளநீரில் தத்தளிக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்.. "தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!"
இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இம்மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளை தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு வரவழைத்து அவர்களை கெளரவப்படுத்தினார். மேலும், அவர்களுக்கு வேஷ்டி, சேலை, முப்பழங்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் சைவ விருந்தும் அளித்தார்.
மேலும், நேற்று ( டிச 2) "திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.