விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயலானது புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பிறகும் கனமழை பெய்து வந்தது. மேலும், புயலினால் புதுச்சேரியும், விழுப்புரமும் அதிகளவு பாதிப்பை சந்தித்தது.
கனமழையால் பாதிக்கபட்ட விழுப்புரம் மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண தொகையும் அறிவித்துள்ளார். முதலமைச்சரை தொடர்ந்து இன்று காலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஆய்வு செய்தார்.
இதற்கிடையில் நேற்று (டிச 3) நள்ளிரவில், சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருவெண்ணெய் நல்லூர் மலட்டாற்றின் ஓரம் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, மாணவியர் விடுதி வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் வெள்ள நீர் புகுந்தது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "பள்ளியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருவெண்ணெய் நல்லூருக்கு வரக்கூடிய பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இப்பகுதியில் நிலைமை சீராகும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுவதில் அலட்சியம் காட்டியதா தமிழக அரசு? மக்கள் பாதிக்கப்பட்டதன் உண்மை நிலவரம்!
சாலை மூடல் : கோலியனூர் கூட்ரோட்டில் இருந்து விக்கிரவண்டி வரை செல்லும் சாலை மழைநீர் பாதிப்பினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனவும், இவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும், இரவு நேர பயணத்தை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் இவ்வழியாக பயணிக்க வேண்டாம் மாற்றுப்பாதை பயன்படுத்திட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கூட்ரோடு பகுதியில் வளவனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரூராட்சி இயக்குனர் ஆய்வு : அரங்கண்டநல்லூர் பேரூராட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை பேரூராட்சி இயக்குனர் கிரண்குமார் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் புயலால் ஏற்பட்ட ஆடு மாடுகள் இறப்பு, வீடுகள் இடிபாடு குறித்து கணக்கெடுப்பு பணியும் நடைபெற்றது. மேலும், தேவனூர் பகுதியில் புயலால் ஐந்து மான்கள் இறந்துள்ளன.