விழுப்புரம்: வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழையை சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மலட்டாறு பாலத்தை ஒட்டிய பகுதியில் சாலை துண்டிப்பு, தாலுகா அலுவலகம் அருகில் உள்ள வீடுகள் சில இடிந்து சேதம், விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதம், டிராக்டர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சேதம், தாலுகா அலுவலக கட்டிட சுற்றுச்சுவர் சேதம் மற்றும் குடியிருப்பு வாசிகள் பயன்படுத்திய மின்கம்பங்கள் சில காணாமல் போயுள்ளன.
இதுமட்டும் அல்லாது, மின்சாரம், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் திருவெண்ணைநல்லூர் நகரம் தீவுபோல் காட்சியளிப்பதோடு, செல்போன் டவரில் சிக்னல் இல்லாததால் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.சாத்தனூர் கிராமம் சுமார் 10 அடி தண்ணீரில் மூழ்கியதால் இரண்டு நாட்கள் பொதுமக்கள் உயிருக்கு போராடும் நிலைமை ஏற்பட்டதாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட வளர்ப்பு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், 3 நபர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாகவு, ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுவதில் அலட்சியம் காட்டியதா தமிழக அரசு? மக்கள் பாதிக்கப்பட்டதன் உண்மை நிலவரம்!
மேலும், வெள்ளம் வந்தபோது வி.சாத்தனூரில் இருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் ரயில்வே கேட் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிராம மக்கள் வெள்ள நீர் வெளியேறிய பின்னர் வீடுகளில் இருந்த எஞ்சிய பொருட்களை மீட்டு தற்போது காயவைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த வெள்ள பாதிப்பு குறித்து மலர் என்பவர் கூறுகையில், "எனது கணவருக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு ஆடு மேய்க்கும் தொழில் செய்து எங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறோம். சுமார் 160 ஆடுகள் வளர்த்து வந்தோம். தற்போது ஏற்பட்ட இந்த புயல் காரணமாக ஏரிகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததில் நாங்கள் வளர்த்த ஆடுகளில் சுமார் 60 ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மீதமுள்ள ஆடுகள் இறந்துவிட்டது.
தண்ணீர் வந்தபோது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள மற்றொருவர் வீட்டின் மொட்டை மாடியில் தங்கி இருந்தோம். மேலும், பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள், புத்தகங்கள் தண்ணீர் அடித்து சென்றுவிட்டது. அதுமட்டும் அல்லாது வீட்டு பத்திரங்கள், பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டது" என வேதனை தெரிவித்தார்.
இதேபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வி.சாத்தனூர் கிரமத்தைச் சேர்ந்த செல்லமா என்ற மூதாட்டி கூறுகையில், "வீட்டின் பத்திரம், ரேசன் அட்டை, ஆதார் அட்டை என அனைத்து முக்கியமான ஆவணங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. தற்போது நாங்கள் எதுவும் இல்லாமல் நிர்க்கதியாக்க உள்ளோம். ஆகவே, எங்களது பகுதியில் உள்ள ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளை சீர் செய்து தரவேண்டும். அதேபோல, மக்கள் இழந்த முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் திருப்பி தரவேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.