லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'அவதார்' திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான இந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்றது.
அவதார் படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அவதார் இரண்டாம் பாகம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீளம் என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அவதார் இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் கொண்டது. இது முதல் பாகத்தைவிட 30 நிமிடம் அதிகம். படத்தின் நீளம் குறித்து யாரும் புலம்பவோ, குறை கூறவோ வேண்டாம்.
தொலைக்காட்சி தொடர்களை சுமார் எட்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க மக்கள் தயாராக இருக்கும்போது, இப்படத்தின் நீளம் பற்றி யாரும் புலம்புவதை நான் விரும்பவில்லை. அதேபோல், என் குழந்தைகள் ஐந்து மணி நேரம் உட்கார்ந்து வெப் சீரிஸ் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் திரைப்படங்களை நேர அளவீட்டை வைத்து விமர்சிக்கும் மன நிலை மாற வேண்டும்.
படம் நீளமாக இருக்கும்போது, பார்வையாளர்கள் சிறுநீர் கழிக்க எழுந்து செல்வது பரவாயில்லை. இப்படம் உங்களுக்கு உற்சாகமான, பைத்தியக்காரத்தனமான அனுபவத்தை வழங்கும். இப்படம் மிகவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. கரோனா பரவலுக்கு முன்பு இவ்வளவு செலவில் ஒரு படத்தை உருவாக்குவது வணிக ரீதியாக சவாலான விஷயம். இது உண்மையில் வணிக ரீதியாக எப்படி ஓடும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா... ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்