கரோனா பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்திருந்தாலும், சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை குறைக்கும் விதமாக, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 12 லட்சம் (1.2 மில்லியன்) கரோனா தடுப்பூசிகளை இந்தோனேசியா வாங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியா நாட்டு மக்களிடையே தடுப்பூசிகளை விநியோகிக்கும் வகையிலான திட்டத்தை வகுத்து வருகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில், இத்திட்டம் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 18 லட்சம் (1.8 மில்லியன்) தடுப்பூசிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம், இந்தோனேசியாவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்து முதற்கட்டமாக, மருத்துவ பணியாளர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.