48ஆவது ஜி-7 மாநாடு ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உட்பட இத்தாலி, ஜப்பான், கனடா நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜெர்மனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி உக்ரைன் - ரஷ்யப்போரினால் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை;உலகளாவிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால் உயரும் எரிபொருள் மற்றும் உணவு தானியங்களின் விலை பல நாடுகளை பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புவதாக தெரிவித்தார்.
பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் இந்திய விவசாயிகள் மூலம், ஜி 7 நாடுகளுக்கான உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறினார். அடுத்த ஆண்டு சர்வதேச சிறு தானியங்களின் ஆண்டாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜி 7 நாடுகள் சத்தான சிறு தானியங்களின் பயன்களை ஊக்குவிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பெண்களுக்கான வளர்ச்சி என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற பாதையை நோக்கி இந்தியா நகர்ந்து வருவதாகப் பேசிய பிரதமர் மோடி, கரோனா பேரிடரில் 60 லட்சம் பெண்கள் முன்களப் பணியாளர்களாக பணியாற்றியதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் கரோனா பரிசோதனை கருவிகள் தயாரிப்பதிலும் , தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் பெண் விஞ்ஞானிகள் மிகப்பெரிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். எப்போதும் இந்தியாவில் 10 லட்சம் தன்னார்வலர்கள் ஆஷா பணியாளர்கள் என்ற பெயரில் கிராமப்புற சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதாக கூறினார். கடந்த மாதம் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார அமைப்பு '2022 Global Leaders Award' வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு இந்தியா ஜி-20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இருக்கிறது.
இதையும் படிங்க: உத்தரபிரதேசத்தின் "ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள்" திட்ட பொருட்களை ஜி7 தலைவர்களுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி...!