வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவரது மனைவியுடன் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்
சொந்த ஊரையும், மக்களையும் விட்டுட்டு வந்தாலும் சரி. முடிந்தவரை தாய்நாட்டிற்குச் செல்வதற்கு நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கிறேன். நமது கலாச்சார நிறுவனங்களை மேம்படுத்த பாடுபட வேண்டும். தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கினார். அதில், “உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சென்றபோது என் பங்களாவில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பெயர்ப் பலகை போடப்பட்டிருந்தது. ஏன் என அவர்களிடம் கேட்டேன். என் பெயர்ப் பலகை தெலுங்காக இருக்க வேண்டும் எனக் கூறினேன். அவர்கள் முடியாது என்று சொன்னார்கள்.
தாய்மொழி விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று கடுமையாகச் சொன்னேன். பின்னர் என் பங்களாவின் உள் மற்றும் வெளி வாயிலில் பெயர் பலகை தெலுங்கிலும், அதே போல் ஆங்கிலத்திலும் மாற்றப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் வீட்டில் இருக்கும் போது அவர்களின் தாய்மொழியில் பேச வேண்டும்.
நமது தாய்மொழி, பண்பாடு, தாய் ஆகியவற்றை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதுகுறித்து, பாடங்களை பதிவிறக்கம் செய்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். ஆங்கிலத்துடன் தெலுங்கு மொழியையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும். குழந்தைகள் தெலுங்கு பேசும் போது சில தவறுகள் செய்கின்றனர். அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள்" எனக் கூறி அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:'தமிழர்கள் மொழிக்காக போராடுபவர்கள்' - அமெரிக்காவில் தலைமை நீதிபதி பேச்சு