பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இதையடுத்து, இம்ரான்கானை கைது செய்யும் நோக்கில் அவர் மீது ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அதில் ஒன்று தோஷகானா வழக்கு. இந்த வழக்கை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தொடர்ந்திருந்தது.
இம்ரான் கான் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டபோது அளிக்கப்பட்ட பரிசுகள், விலை உயர்ந்த பொருட்களை அரசுக்கு சொந்தமான தோஷகானா என்ற இடத்தில் சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் அந்த பரிசுப் பொருட்களை சேமித்து வைக்காமல், விற்பனை செய்து அந்த பணத்தையும் மோசடியாக எடுத்துக் கொண்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
தோஷகானா ஊழல் வழக்கை இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கு கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கான் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உடனடியாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தோஷகானா வழக்கில் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேபோல், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் பாகிஸ்தான் அரசு வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இம்ரான் கானின் மேல்முறையீட்டு வழக்கு இன்று(ஆகஸ்ட் 25) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், வழக்கு விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த மே மாதம், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, நீதிமன்ற வளாகத்திலேயே இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆறு வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய இம்ரான் கான் மனு தள்ளுபடி!