சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, தற்போது உலகின் பிற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியா உள்பட அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 864 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து இரண்டு ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 57லட்சத்து 95 ஆயிரத்து 777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 454 உயிரிழந்துள்ளனர். உலகளவில் இறப்பு எண்ணிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகவும் அமெரிக்கா உள்ளது.
தொடர்ச்சியாகத் தினமும் 1000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துவருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா உள்ளிட்ட 19 மாகாணங்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இரண்டாம் இடத்திலும் உள்ள பிரேசிலில் கரோனாவால் 35 லட்சத்து 36 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் (ஆக.21) கரோனாவால் 69 ஆயிரத்து 878 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 லட்சத்து 75 ஆயிரத்து 702 பேர் ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்து 794 ஆக உயர்ந்து பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவ வல்லுநர்கள், மேலும் சோதனைத் திறனை அதிகரிக்க வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இந்தியா உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடு.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வந்த 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவில் மைல்கல்: 24 மணி நேரத்தில் 1 மில்லியன் சோதனை!