பாரீஸ் : பிரான்சின் புதிய பிரதமராக கப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டு உள்ளார். 34 வயதான அட்டல் பிரான்சின் முதல் இளம் பிரதமர் என்ற சிறப்பை பெற்று உள்ளார்.
விரைவில் பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வென்று 3வது முறையாக அதிபராக இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டு உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அதிபராக மேக்ரான் பதவி வகித்து வரும் நிலையில், அண்மையில் குடிபெயர்வுச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களால் அவரது ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது எஞ்சிய பதவிக் காலத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் இம்மானுவேல் மேக்ரான் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அவர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை கடந்த திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டு ஆண்டுகளில் பதவி விலகியது பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அதுவரை பிரதமர் பொறுப்புகளை எலிசபெத் போர்ன் கவனிப்பார் என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்தது. இந்நிலையில், பிரான்சிஸ் புதிய பிரதமராக கப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. 34 வயதான கப்ரியல் அட்டல் பிரான்சின் முதல் இளம் பிரதமர் என்ற சிறப்பை பெற்று உள்ளார்.
சோசியலிச கட்சியின் உறுப்பினராக இருந்த கப்ரியல் அட்டல், கடந்த 2016ஆம் ஆண்டு இம்மானுவேல் மேக்ரான் தொடங்கிய மறுமலர்ச்சி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு அரசு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. 2020 முதல் 2022 வரை அரசு செய்தி தொடர்பாளராக இருந்த கப்ரியல் அட்டல், அதன் பின் பட்ஜட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பிரான்ஸ் கல்வி அமைச்சராக கப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சர் பதவி வகித்த போது பல்வேறு புதிய வழிமுறைகளை கல்வித் துறையில் புகுத்தி கவனம் அரசு மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து பிரான்சின் பிரதமராக அவர் பதவி உயர்த்தப்பட்டு உள்ளார். கப்ரியல் அட்டல் ஒரு ஓரினச் செயற்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜப்பானை மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?