இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக இலங்கையில் திங்கட்கிழமை நடைபெற்ற கலவரத்தில் இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார்.
இதனிடையே மக்களின் தீவிர போராட்டத்திற்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் ஹெலிகாப்டரில் வேறு இடத்திற்கு தப்பியுள்ளனர். இந்தச் சூழலில், முன்னாள் இலங்கை பிரதமர் ராஜபக்ச சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுவதை கொண்டாடும் விதமாக கோயம்புத்தூரில் இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
முக்கியமாக கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ராஜபக்ச தனது உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். அவர் சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்து நாங்கள் அதனை கொண்டாடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!