சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தின் இடையே பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மைதானத்தினுள் புகுந்து இடையூறு செய்த பிரபல யூடியூபர் ஜார்வோவின் விசாவை ரத்து செய்த போலீசார், அவரை மீண்டும் லண்டனுக்கே நாடு கடத்தினர்.
பிரபல யூடியூபரும், பிராங்ஸ்டருமான ஜார்வோ, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டங்களில் எல்லாம் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து இடையூறு செய்வதை வாடிக்கையாகவே கொண்டு உள்ளார். பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைவது, வீரர்களுடன் பீல்டிங் செய்வது, அல்லது ஒரு வீரர் அவுட்டாகி மற்றொரு வீரர் களமிறங்குவதற்குள் அவருக்கு பதிலாக களமிறங்குவது உள்ளிட்ட செயல்களில் ஜார்வோ தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
ஓவ்வொரு ஆட்டத்திலும் பாதுகாப்பு விதிகளை மீறி ஜார்வோ மைதானத்திற்குள் நுழைவதால் பொது மக்கள் இடையே இவர் பிரபலமானார். இந்தியா விளையாடும் ஆட்டங்களில் எல்லாம் எப்படியாவது பாதுகாப்பு விதிகளை மீறி மைதானத்திற்குள் நுழைவதை ஜார்வோ வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
கடந்த கடந்த 8ஆன் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு ஜார்வோ திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.
இதனால் ஆட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 69 என்ற எண் பொறித்த இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்ட ஜார்வோ, நேராக விராட் கோலி அருகே சென்றார். இதையடுத்து மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விராட் கோலி அவரை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர்.
இதையடுத்து ஜார்வோவை பிடித்த பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் விளையாட்டை பார்ப்பதற்காக கடந்த 6ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்ததும், போட்டிக்கான டிக்கெட் அவரிடம் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் வீரர்களுக்கு இடையூறாக மைதானத்திற்குள் சென்றதால் இந்தியாவில் நடைபெறும் மற்ற உலக கோப்பை போட்டிகளை காண்பதற்கு ஐசிசி ஜார்வோவுக்கு தடை விதித்தது. மேலும் அவரது விசாவையும் போலீசார் ரத்து செய்தனர். பின்னர் அவரை மீண்டும் இந்தியாவில் இருந்து விமான மூலம் லண்டனுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணியின் வீரர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்வோ இந்திய அணியின் போட்டி நடைபெறும் போது மைதானத்திற்குள் செல்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிகள் விளையாடிக் கொண்டிருந்த போது ஜார்வோ இந்திய அணையின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேட்டிங் செய்யவும் பந்து வீசவும் மைதானத்திற்குள் ஓடி வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதன் மூலம் ஜார்வோ கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமானார். மேலும் இது போன்று அவர் தொடர்ந்து ஈடுபட்டதால், அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்து சில போட்டிகளை காண்பதற்கு தடையும் விதித்தது.
இதையும் படிங்க : "ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்" - சாதனை மங்கை வித்யா ராம்ராஜ்!