டெல்லி : அமெரிக்கா ராணுவத் தலைமையகமான பெண்டகனில் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு முறையில் தயாரிக்கப்பட்ட போலியான புகைப்படம் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் அந்த புகைப்படம் ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கு ஒன்றில் இருந்து பரவியதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்ட இந்த புகைப்படம் அரை மணி நேரத்தில் பல்வேறு கணக்குகளில் பதிவிடப்பட்டு பயங்கர வைரலாக மாறியது.
இந்த புகைப்படம் அமெரிக்க பாதுகாப்புத் துறை பார்வைக்கு சென்ற நிலையில், போலீசார் விளக்கமளித்து உள்ளனர். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அல்லது அந்த வளாகத்தில் எந்த வித வெடிவிபத்தும் ஏற்படவில்லை என போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பெண்டகனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது போன்றும் அதிலிருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது போன்றும் அந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் AI என்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் இந்த புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் பொருத்திய ஒரு கணக்கில் இருந்து புகைப்படம் வெளியானதால் பல்வேறு தரப்பினரும் இந்த புகைப்படத்தை உண்மை என நம்பி உள்ளனர். வெறும் 8 டாலர் மாத சந்தா செலுத்தினால் யாருக்கு வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ கணக்கிற்கான அந்தஸ்து என எலான் மஸ்க் அறிவித்ததன் விளைவு தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என ட்விட்டர் பயணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினர் இந்த பிரச்சினைக்கு பிறகு ட்விட்டர் சந்தா முறையை நீடிக்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புகைப்படம் வெளியான கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. ட்விட்டர் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி அதன் பிரதிபலிப்பை பங்கு சந்தையில் காட்ட சிலரின் முயற்சியால் இந்த போலி ட்வீட் பதிவிடப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதேநேரம், அமெரிக்க பங்குச் சந்தையில் இந்த விவகாரம் பூதாகரம் அடைந்தது. இந்த பிரச்சினையின் மூலம் ட்விட்டர் நிறுவனம் அரசை பகைத்துக் கொண்டதாக முதலீட்டாளர்கள் எண்ணியது அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை வீழ்ச்சி மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இருப்பினும் இந்த பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக ட்விட்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : சிட்னியில் பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி சி.இ.ஓ.,க்களுடன் சந்திப்பு!