உலக விண்வெளி வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படும் ஸ்டார்ஷிப் எனும் சூப்பர் ஹெவி ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சோதனை (Spacex Starship Rocket Launch) முயற்சியாக விண்ணில் ஏவ உள்ளது. இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் இனி, மனிதர்களைச் சுமந்து கொண்டு நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இந்த ராக்கெட் செல்லும்.
ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட் 120 மீட்டர் (394 அடி) உயரம் கொண்டதோடு 33 என்ஜின்கள் மூலமாக வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. 9 மீட்டர் சுற்றளவும், 150 டன் எடையும் கொண்டதாகும். நூறு பேர் வரை இதில் பயணிக்க முடியும். மேலும், இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டாலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (ஏப்.17) மாலை ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணங்களுக்காக மீண்டும் 48 மணி நேரத்திற்கு ஏவப்படும் பணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்ஏஏ வெளியிட்ட அறிவிப்பில், ஸ்டார்ஷிப் ஏவப்படுவதற்கான அனைத்து தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஏவப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
ராக்கெட் ஏவப்படுவதற்கான உரிமம் குறித்த சிக்கல் காரணமாக அப்போது தள்ளிவைக்கப்பட்டு, இன்று ஸ்டார்ஷிப் விண்ணில் பாயும் என உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு இருந்தநிலையில், இதற்கான கவுன்ட் டவுனும் துவங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏவப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு சரியாக 30 நொடிகளுக்கு முன்பாக தொழில்நுட்பக் காரணங்களால் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் அறிவித்தார். இதனிடையே உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ட்விட்டரில் புது வசதி அறிமுகம் - அதிலும் ட்விஸ்ட் கொடுத்த எலான் மஸ்க்!