பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லூடிங் கவுன்டியில், கடந்த 5ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டிடங்கள் சேதமடைந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பலர் மாயமாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய நிலவரப்படி மேலும் 25 பேர் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கனமழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட செங்குடு நகரில், கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற முற்பட்டாலும், கரோனா பரவலை காரணம் காட்டி, நகர நிர்வாகம் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை.
இதையும் படிங்க:சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்