மத்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று (அக் 24) உருவான சிட்ராங் புயல், வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதியில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. தொடர்ந்து டிங்கோனா தீவு மற்றும் பாரிசாலுக்கு அருகில் உள்ள சாண்ட்விப் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கதேசத்தின் டாக்கா மற்றும் குமில்லா தவுலத்கானில் உள்ள நாகல்கோட், போலாவில் உள்ள சார்ஃபெசன், நரைலில் உள்ள லோகாரா ஆகிய இடங்களில் வீசிய சிட்ராங் புயலினால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக மரங்கள் சாய்ந்து மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலானது வங்கக்கடலில் கரையை கடக்க உள்ளதால், காக்ஸ் பஜார் கடற்கரையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கால்நடைகள் வெளியேற்றப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை காக்ஸ் பஜார் கடற்கரையில் இருந்து 28,155 பேர் மற்றும் 2,736 கால்நடைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. அதேநேரம் 576 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
ஒருவேளை காக்ஸ் கடற்கரை பகுதி சிட்ராங் புயலால் பாதிக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்காக 323 டன் அரிசி, 1,198 உணவு பொட்டலங்கள், 350 உலர் கேக் பெட்டிகள் மற்றும் 400 செரிமான பிஸ்கெட் பேக்கேஜ்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக காக்ஸ் பஜார் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி நாளில் உருவாகப்போகும் புயல்..! வானிலை எச்சரிக்கை..