பீஜிங்: சீனாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் நிரம்பி காணப்படுவதாகவும், படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு தினசரி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி தீயாய் பரவின.
மேலும் கரோனா பரவல் விகிதம் அதிகரித்து மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் அதீத மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவின.
ஊரடங்கு அமல்: இதனால் சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கரோனா பாதித்தவர்கள் வீடு உள்ள பகுதிகள் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்துதல் என பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தியது. மேலும் கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு வழங்கியதாக கூறப்பட்டது.
தொடர் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் இழந்து வாழ்வாதாரம் பாதித்த மக்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வீதிகளில் இறங்கி, அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது சீன அரசு மனிதாபிமானம் அற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
ரகசியம் காத்த சீனா: மேலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை வெளியே கூறாமல் சீனா ரகசிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. பரவலின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை சீன அரசு வெளியிடக் கோரி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதனிடையே பொது மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றான்டுகளுக்குப் பின் சீனாவின் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் ஹாங்காங் எல்லை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் உறவினர்களை கண்டனர்.
கரோனா உயிரிழப்பு பட்டியல்: இந்நிலையில், கரோனா குறித்த உலக நாடுகளில் தொடரும் கேள்விகளுக்கு சீனா மவுனம் கலைத்துள்ளது. சனிக்கிழமை வெளியிட்ட சீனாவின் தரவுகளின் படி ஏறத்தாழ 60 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் தொடக்கத்தில் இருந்து இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதாகவும், ஏறத்தாழ 5 ஆயிரத்து 503 பேர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாகவும், மீதமுள்ள 54 ஆயிரத்து 435 பேர் கரோனாவின் உடன் இணைந்த மற்ற நோய்களால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீனா வெளியிட்ட அறிக்கையில் உண்மைத் தன்மைக்கு முரணாக உள்ளதாகவும், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் அதிகளவிலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே இறந்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொடர்பான கூடுதல் விவரங்களை சீனா வெளியிட வேண்டுமென உலக நாடுகள் சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதையும் படிங்க: தோழியுடன் கடலை போட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் கைது!