சென்னை: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வாழ்வதாக அறியப்படுகிறார். இந்த நிலையில், இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பாகிஸ்தானின் கராச்சியில் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
மேலும், பாகிஸ்தானின் எதிர்கட்சியான பாகிஸ்தான்-தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கூட்டம் விர்ச்சுவல் முறையில் நடத்தப்பட்டது. அதேநேரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தாவூத் இப்ராகிம் மரணமடைந்தார் என்ற தகவலுக்கு, அவரது நெருங்கிய உதவியாளராக சோட்டா ஷகீல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், தாவூத் இப்ராகிம் 1,000 சதவீதம் நலமுடன் உள்ளதாகவும், அவர் உடலளவில் நல்ல முறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல் பரப்பப்படுவதாகவும் சோட்டா ஷகீல் கூறியுள்ளார். அதேநேரம், தாவூத் இப்ராகிம் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வருவதாக இந்திய உளவுத்துறை தரப்பிலும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஒரு யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் தாவூத் இப்ராகிம் மரணமடைந்துவிட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள்..! மேலும் ஒரு பத்திரிக்கையாளர் படுகொலை..!