லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா): குங்ஃபூ தற்காப்புக்கலையின் ஜாம்பவானும், நடிகருமான புரூஸ் லீ, கடந்த 1973ஆம் ஆண்டு தனது 32ஆவது வயதில் அகால மரணமடைந்தார். அவரது மரணம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதிகளவு வலி நிவாரணியை எடுத்துக்கொண்டதால், பெருமூளையில் வீக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவரது இறப்புக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாததால், பல்வேறு வதந்திகள் பரவின.
சீனாவைச்சேர்ந்த கேங்ஸ்டர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது காதலியால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், சாபம் காரணமாக இறந்துவிட்டார் என்றும் பல வதந்திகள் பரவின.
இந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, புரூஸ் லீயின் இறப்பு குறித்து புதிய தகவலை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ள தகவல்களை மதிப்பாய்வு செய்ததில், அவர் ஹைபோநெட்ரீமியா (Hyponatremia)-வால் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
ஹைபோநெட்ரீமியா என்பது, அதிகளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு ஆகும். அதன்படி, அதிகளவு சிறுநீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. லீ, ஹைபோநெட்ரீமியாவால் இறந்திருக்கலாம் என பல்வேறு காரணிகளை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவர் இறப்பதற்கு முன்பு அதிகளவு தண்ணீர் குடித்தார் என்றும், அதேநேரம் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் வைத்திருந்தார் என்றும் தரவுகள் உள்ளன. கஞ்சா பயன்பாடு, அதிகளவு தண்ணீர் தாகத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரித்து, உடல் உறுப்புகளின் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால், அதிகளவு தண்ணீர் குடித்ததால் புரூஸ்லீ இறந்திருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.