வாஷிங்டன் (அமெரிக்கா): அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று, புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) இரண்டாவது பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உரிய நேரத்தில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜோ பைடன் அரசு கரோனா தொற்று குறித்தான (COVID.gov) என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் கரோனா தொற்று நடவடிக்கையை எதிர்கொள்ள தேவையான நிதியுதவி வழங்குமாறு பெரு நிறுவனத்தினர், தொழிலதிபர்கள், பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் முதலாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நான்கு வாரத்தில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (ஃபைசர், பயோஎன்டெக் அல்லது மாடர்னா) தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்னதாக கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டார். பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்தநிலையில் நேற்று தனது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: EXCLUSIVE: 'பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால் சீனா செல்லமாட்டார்' - பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி