அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஜோ பிடன் இன்று (ஆகஸ்ட் 12) துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் என்பவர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டுயிடவுள்ளதாக கமலா ஹாரிஸ் பெயர் அறிவிக்கப்பட்ட உடனே அவரை குறித்து தகவலறிய ஒட்டுமொத்த உலகமும் ஆர்வம் மிகுந்து தேடியது.
பெரும்பாலான தலைப்புச் செய்திகளில் முக்கிய இடம்பெற்ற அவரை 'ஆப்பிரிக்க-அமெரிக்கர்' என்றே நினைத்தனர். ஆனால், துணை அதிபர் வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்ட கமலா ஹாரிஸ் உண்மையில் இந்திய வம்சாவளி என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் செனட்டராக பதவி வகித்துவரும் கமலா ஹாரிஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஷியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸுக்கும் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவராவார்.
55 வயதான கமலா ஹாரிஸின் வாழ்க்கை போராட்டங்களால் நிறைந்தது. சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்குரைஞராக தன் பணியைத் தொடங்கிய அவர் பின்னாளில் கலிபோர்னியாவின் அரசு வழக்குரைஞராக தன் கடின உழைப்பால் உயர்ந்தவர். இந்த இரண்டு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 'பெண் ஒபாமா' என புகழ்பெற்ற வழக்குரைஞர் 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அரசியல் களத்தில் தனி ஒருவராக நுழைகிறார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கான மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கி, மாணவர்களின் நல்வாழ்விற்கு அடித்தளமிட்டது, தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தது, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் சீர்த்திருத்தப் பணிகள் போன்ற அவரது அரசியல் வேலைகள் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தது. தொடர்ச்சியான அரசியல் பணிகள், அயராத உழைப்பு அவரை அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
வில்மிங்டனில் நடைபெற்ற துணை வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிடென் குறிப்பிட்டப்படி, நாட்டின் மிகச்சிறந்த பொது ஊழியர்களில் ஒருவராகவே அறியப்படும் கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களை ஒன்றிணைப்பார் என்றே அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"எல்லோரும் சம உரிமைப் பெற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கை வழியில் பயணித்து புதிய அமெரிக்காவை உருவாக்குவோம்" என தனது முதல் மேடையிலேயே சரவெடி பேச்சால் மக்களின் கவனத்தை ஈர்த்த கமலா ஹாரிஸ் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான காலத்தில் பிடெனுடன் தேர்தல் களத்தில் இணைந்திருக்கிறார்.
கரோனா வைரஸ் தொற்றுநோய் உயிரிழப்புகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, கருப்பின மக்களின் இனவெறி எதிர்ப்பு போராட்டம் என நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலையை கமலா ஹாரிஸ் தனது பரப்புரையின் மையமாகக் கைக்கொள்வார் என அறிய முடிகிறது.