அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே இரு தரப்பினரும் அனல் பறக்கும் வகையில் பரப்புரை செய்துவருகின்றனர்.
கோவிட்-19 பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என அதிபர் ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக திரட்டப்பட்ட நிதியானது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வந்த தொகையைக் காட்டிலும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏறத்தாழ 177 மில்லியன் அளவு அதிபர் ட்ரம்பைக் காட்டிலும் கூடுதல் நிதியை பிடன் திரட்டியுள்ளதாக அறிய முடிகிறது. இதுவரை, பிடனின் தேர்தல் பரப்புரைக்கு 383 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி வந்தடைந்துள்ளது. அதே நேரத்தில், அதிபர் ட்ரம்ப் வெறும் 247.8 மில்லியன் டாலர்களை மட்டுமே திரட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ட்ரம்ப் ஆதரவு பரப்புரை தகவல் தொடர்பு இயக்குநர் டிம் முர்டாக், "ஜனாதிபதி ட்ரம்ப் அரசியல் பணிகளை, வெற்றிகளை, அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக அவர் உழைத்த உழைப்பை மக்களிடையே பரப்புவதற்கு இந்த நிதியே போதுமானது. அவர் வெகு மக்களிடையே செல்வாக்கை பெற்றுள்ளார். அதுவே அவரது வெற்றியை உறுதி செய்யும்" என கூறியுள்ளார்.