டாக்கா: பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணமாக நாளை (செப்.5) இந்தியா வரவுள்ளார். இந்த நிலையில், அவர் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கையில், இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த பேட்டியில், "இந்தியா பங்களாதேஷ் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின்போது, அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்களை போலந்து வழியாக மீட்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்தார். அப்போது, உக்ரைனில் சிக்கியிருந்த எங்களது மாணவர்களையும் மீட்டு வந்து தாயகத்தில் சேர்த்தனர்.
இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை நீங்கள் பார்க்கலாம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா காலத்தில், பங்களாதேஷிற்கு மட்டுல்லாமல் சில தெற்காசிய நாடுகளுக்கும் இந்தியா கரோனா தடுப்பூசி வழங்கி உதவியது.
இது உண்மையில் மிகவும் பெரிய உதவி. இதற்காவும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். 1971ஆம் ஆண்டு போரின் போதும், அதற்குப் பிறகும் இந்தியா பங்களாதேஷிற்கு துணையாக இருந்துள்ளது. இந்தியா எங்களது பரிசோதிக்கப்பட்ட நல்ல நண்பன்" என்று கூறினார்.