இலங்கை: விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபன் இலங்கை மற்றும் இந்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்தவர். இவரது 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் அவரது உருவப்படம் ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நினைவேந்தல் ஊர்வலத்தின் 3ஆம் நாளாகிய செப்டம்பர் 17ஆம் தேதி அன்று, பொத்துவில் தொடங்கி, நல்லூர் வரையான உருவப்படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது கப்பல் துறைப் பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும், சிங்களக் காடையர்களும் இணைந்து நினைவு ஊர்தி மற்றும் உருவப்படம் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலில் நினைவு ஊர்தியின் ஓட்டுநர் மற்றும் ஊர்வலத்தில் சென்ற மக்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த இரு நாட்களாக புலனாய்வாளர்கள் ஊர்தியினைப் பின்தொடர்ந்து வந்ததோடு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் காடையர்களால் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நினைவேந்தல் ஊர்வலத்தில் புகுந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஊர்தியில் பயணித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், “திலீபன் மூலமாக இந்தியா இழைத்த பெருந்தவறை எங்கள் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் எங்கள் செயல்பாடுகளை மறைப்பதற்காகவும், தமிழ் மக்களுடைய உரிமை போராட்ட கோரிக்கைகளை நீர்த்து போகச் செய்வதற்காகவும், எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
நாங்கள் இது போன்ற தாக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம். இவர்கள் இவ்வளவு தாக்குதல்களை மேற்கொண்டாலும், படுகொலைகளை மேற்கொண்டாலும் ஜனநாயக வழியிலே எங்கள் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.