மலேசியா: மலேசியாவின் பகடன் ஹரபன்(PH) கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் மலேசியாவின் 10ஆவது பிரதமராக பதவியேற்கவுள்ளார். இவரின் பதவியேற்பு விழா மாளிகையில் அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.19ஆம் தேதி நடைபெற்ற மலேசியா தேர்தலில் எந்தக் கட்சிக் கூட்டணியும் ஆட்சியமைக்க முடியாது தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. இதையெடுத்து, மலேசியாவின் இந்த நிலையை சரி செய்ய அந்நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அகமது ஷா பல்வேறு முக்கிய கட்சிக் கூட்டணிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்படி, அன்வரின் பகடன் ஹரபன்(PH) கூட்டணி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 82 தொகுதிகளில் வெற்றிபெற்றமையால் அந்தக் கூட்டணியே மலேசியாவில் ஆட்சியமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. மலேசியாவில் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு வேட்பாளரின் மறைவால் அந்தத் தொகுதியின் தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள 221 தொகுதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரிகடான் நாசியோனல்(perikatan nasional) கட்சி 73 இடங்களிலும் பாரிசன் நாசியோனல் (Barison Nasional) கட்சி 30 இடங்களிலும், சரவாகின் வடக்கு போர்னியோவைச் சேர்ந்த கட்சிகள் 23 இடங்களிலும் வெற்றி பெற்றதாக மலேசியா தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையும் படிங்க: நேபாள தேர்தல்; சொந்த தொகுதியில் 7 வது முறையாக வெற்றி பெற்றார் பிரதமர்