பெய்ரூட்: ஜோர்டான் நாட்டின் ராணுவம் சமீபமாக போதைப்பொருள் விற்பனையாளர்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு சிரியாவில் இன்று (ஜன.18) அதிகாலை வான்வழி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இந்த தாக்குதலை ஜோர்டான் நாட்டின் விமானப்படை நடத்தி இருக்கலாம் என சிரியாவின் எதிர்கட்சி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உர்மன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தலா 2 பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், அதேபோல் மற்றொரு வீட்டில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பிரிட்டனை தளமாக கொண்ட குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து கண்காணிப்பு இயக்குநர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறுகையில், "போதைப் பொருட்கள் கடத்தலை எதிர்த்து போராடுவதாக சாக்குபோக்குகளை கூறி அப்பாவி பொதுமக்களின் வீடுகள் மீது அடிக்கடி தாக்குதலை மேற்கொள்கின்றனர். அவர்கள் குறிவைத்து தாக்கிய இரண்டு ஆண்களும் போதைப்பொருட்கள் கடத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது உறுதிபடுத்தப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஜோர்டான் நாட்டின் தொலைக்காட்சியான அல் மம்லகா, "போதைப்பொருட்கள் கடத்தல்காரர்களை பின் தொடர்வதன் ஒரு பகுதியாக நாட்டின் விமானப்படை சிரியாவில் இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக" கூறியுள்ளது. மேலும், சிரியாவில் இருந்து கடத்தப்பட்ட முக்கிய மருந்துகளில் ஒன்று ஆம்பெடமைன் போன்ற தூண்டுதல் கேப்டகன் ஆகும், இதற்கு எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடாவில் பெரும் தேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வருகை - சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு - 22 ஆயிரம் போலீசார் குவிப்பு!