கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தற்போது தீவிரமாகப் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த மாதம்வரை சீனா, ஈரானில் மட்டும் தீவிரமாகப் பரவிவந்த கரோனா வைரஸ் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும்விதமாக வளைகுடா நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அச்சுத்தாள்கள் மூலம் கரோனா பரவும் அபாயமுள்ள நிலையில், அங்குள்ள அச்சு நிறுவனங்கள் அனைத்தையும் மூடிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தித்தாள்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அனைத்து அச்சு நடவடிக்கைகளும் நிறுத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, அங்குள்ள செய்தி நிறுவனங்கள் டிஜிட்டல் மூலமாக இணையவழி செய்திகளை மட்டுமே வெளியிட வேகமாகத் தயாராகிவருகின்றன. கரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலமும் பரவும் என அண்மையில் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?