ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட நாட்டின் வடக்குப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளருக்கு எதிராக, சவுதி-ஐக்கிய அரபு அமீரக கூட்டுப்படையின் ஆதரவோடு ஏமன் இடைக்கால அரசு பல்வேறு தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் இருந்து சுமார் 130 கி.மீ. தெற்கே தமார் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது சவுதி-ஐக்கிய அரபு அமீரக கூட்டுப்படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இதில், 60-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் யூசப் அல்-ஹிடாதி தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 50 பேர் காயமடைந்ததாக அல் மசிரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலி எண்ணிக்கை குறித்து ஏமனுக்கான சர்வதேச குழு தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு...
'இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என ICRC தலைவர் பிரான்ஸ் ரவ்சென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் முடிந்தால்தான் சரியான பலி எண்ணிக்கை தெரியவரும்.
இந்த வான்வழித் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வுகள் சிறைக்கு அருகேயுள்ள குடியிருப்புகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டுள்ள ஏமன் உள்நாட்டுப் போரை உலகத்தின் மிக மோசமான மானிடப் பேரிடர் எனக்கூறி ஐநா கவலை தெரிவித்துள்ளது.