புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று சீனாவின் வூகான் பகுதியில் முதன்முதலாக அறியப்பட்டது. மனித இனம் விழித்துக் கொள்வதற்குள் அண்டை நாடுகளை பதம் பார்த்தது.
இதற்கிடையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மிகப்பெரிய விலை கொடுத்துவருகின்றன. இந்த வரிசையில் வளைகுடா நாடான ஈரானும் உள்ளது.
இங்கு 91 ஆயிரம் பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஐந்தாயிரத்து 806 ஆக உள்ளது. இந்த நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து விடுபட மெத்தனால் ஆல்கஹால் குடித்து கடந்த ஒன்றரை மாதத்தில் 728 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் விஷச் சாராயம் அருந்திய 728 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும்.
கரோனா அச்சம் காரணமாக ஐந்து ஆயிரத்து 11 பேர் மெத்தனால் ஆல்கஹால் குடித்துள்ளனர். இதனால் நெஞ்சு வலி, குமட்டல், ஹைப்பர்வென்டிலேஷன், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. ஈரானில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கிறிஸ்தவ சிறுபான்மையினர், யூதர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் உள்ளிட்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, புதிய ஆல்கஹால் தொழிற்சாலைகளுக்கு விரைவாக அனுமதி வழங்குவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்தது. ஈரானில் தற்போது சுமார் 40 ஆல்கஹால் தொழிற்சாலை உள்ளது.
அவை மருந்து மற்றும் சுத்திகரிப்பு பொருட்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, கரோனா பரவலுக்கு முன்பே ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
ஏனெனில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, கச்சா எண்ணெயை வெளிநாட்டில் விற்பனை செய்வதைத் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுனாமியை உண்டாக்கும் சிறுகோள், பூமியை தாக்கினால் நாடுகள் அழியும்!