1979ஆம் ஆண்டு முதன்முதலில் கையெழுத்திடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ் 800 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் திட எரிபொருள் நிரப்பபட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை தென் கொரியா ஏவுதல் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது திடீரென்று திட எரிபொருளுக்கான கட்டுப்பாடுகள் நீக்குவதாக அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திடீர் முடிவுக்கு வட கொரியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வட கொரியா ஊடக அறிக்கையில், ”சியோலும் வாஷிங்டனும் இரு நாடுகளுக்கிடையேயான ஏவுகணை வழிகாட்டுதல்களில் ஜூலை 28ஆம் தேதியன்று திருத்தம் செய்தன. குறிப்பாக, திட எரிபொருளுக்கான தடைகளை நீக்குவது தெற்கில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். விண்வெளிக்கு ராக்கெட்கள் அனுப்புவது வளர்ச்சியடைவது மட்டுமின்றி வடக்கை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள் ஏவுதற்கும் வழிவகுக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வட கொரியா ஊடக அறிக்கையில், "இச்செயலானது சியோலின் தீய நோக்கங்களை வெளிபடுத்தியுள்ளது. திட எரிபொருள் செலுத்தும் விண்வெளி ராக்கெட்டுகள் குறைந்த சுற்றுப்பாதை உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அனுமதிக்கின்றன. தென் கொரியாவின் இந்த நடவடிக்கையை முரண்பாடான அணுகுமுறை” என விமர்சிக்கப்பட்டுள்ளது.