மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகக் கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட அதிர்வலைகளால் சுமார் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. மேலும், இந்தத் துறைமுகக் கிடங்கிற்கு அருகே இருந்த அனைத்துக் கட்டடங்களும் முழுவதுமாக நாசமாகின.
இந்த விபத்தில் 191 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், இந்த துறைமுகப் பகுதியைச் சுற்றி லெபனான் ராணுவத்தினர் சோதனை செய்துவருகின்றனர்.
அப்போது துறைமுகத்திற்கு அருகில் நான்கு கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த 4.35 டன் ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். மிகவும் ஆபத்தான இந்த ரசாயனம் எவ்வாறு இங்கு வந்தது, இதன் உரிமையாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்பட அந்நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து பிரெஞ்சு, இத்தாலிய நாடுகளைச் சேர்ந்த ரசாயன வல்லுநர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். அப்போது அவர்கள் பெய்ரூட் துறைமுகத்தில் சுமார் 20 கண்டெய்னர்களில் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர், அந்த ராசாயனங்கள் ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: ”கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைய மாட்டோம்" - அமெரிக்கா