ஈராக் தலைநகர், பாக்தாத்தில் அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் இருக்கும் பகுதி பசுமை மண்டலம் அல்லது சர்வதேச மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
எந்நேரமும் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் காட்சியளிக்கும் இந்த மண்டலத்தில் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த ஏவுகணை ஆள் ஆரவமற்ற வீட்டையே தாக்கியதாகவும், இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஈராக் ராணுவம் கூறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏவுகணை கட்யூஷா வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
பசுமை மண்டலத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், அந்நாட்டுப் படைகளையும் நோக்கியுமே ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தத் தாக்குதல்களுக்கு கதெய்பு ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பே காரணம் என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக, இம்மாதம் 7ஆம் தேதி ஈராக்கின் புதிய பிரதமராக முஸ்தபா அல்-காதிமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, பசுமை மண்டலத்தில் தாக்குதல் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
பிரதமர் முஸ்தபா தலைமையிலான நிர்வாகம், அடுத்த மாதம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!