ஈரானின் அணுசக்தி லட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அந்நாட்டுடன் அமெரிக்கா, பிரட்டின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் 2015ஆம் ஆண்டு JCPOA என்று அழைக்கப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.
ஈரான் ஆணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிகளைக் கைவிடவிடுவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை இந்நாடுகள் திரும்பப் பெறுவது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் சாரம்சமாகும்.
இந்நிலையில், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, 2018ல் அதிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது.
தொடர்ந்து, 'உச்சஅழுத்த' (Maxium Pressure) கொள்கையின் பேரில் ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது. இதன் காரணமாக, ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது.
இந்நிலையில், உச்சஅழுத்தக் கொள்கைக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் பதவி நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, " போர் விரும்பிகளை (ஜான் போல்டன்) அமெரிக்கா தவிர்க்க வேண்டும். போர் விரும்பிகளால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை அமெரிக்கா உணரவேண்டும்.
எதிர் தரப்பினர் எங்கள் மீது அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை தற்காப்புக் கொள்கைகளை ஈரான் ஒருபோதும் கைவிடாது" என்றார்.
'பொருளாதார பயங்கரவாதத்தை அமெரிக்கா கைவிடவேண்டும்'
இந்நிலையில், ஜான் போல்டனின் பதவிநீக்கத்தைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸஷரீஃப் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது,
வெள்ளை மாளிகையிலிருந்த B-Team-ன் அடியாள் (ஜான் போல்டன்) வெளியேற்றத்தால் உலகம் சிறிது நிவர்த்தி கண்டுள்ளது.
மேலும், ஈரான் மீது மைக்கேல் பாம்பியோவும் (அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்) , ஸ்டீவன் நுசினினும் (அமெரிக்க கருவூலச் செயலாளர்) பொருளாதார பயங்கரவாதத்தை (உச்சஅழுத்த கொள்கையை) அறிவித்துள்ளனர். இதனை அமெரிக்கா கைவிட வேண்டும்" என்றார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துவரும் பொருளாதாரத் தடைகளை 'பொருளாதார பயங்கரவாதம்' என்று ஈரான் விமர்சித்து வருகிறது. ஜான் போல்டன் மற்றும் அவருடன் ஒத்த கருத்துடையவர்களை 'B-Team' (Bolton Team) என ஜாவத் ஷாரிஃப் அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.