ஓமன் வளைகுடாவில் தெஹ்ரானுக்கு தென் கிழக்கே சுமார் ஆயிரத்து 270 கிலோமீட்டர் (790 மைல்) தொலைவில் உள்ள ஜாஸ்க் துறைமுகத்திற்கு அருகே ஈரான் ராணுவம் பயிற்சி மேற்கொண்டது. அப்போது, சிறிய ஏவுகணைகள் சரியாக இலக்கினை தாக்குகிறதா என சோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராணுவப் பயிற்சியின்போது, ஏவுகணை ஒன்று தனது இலக்கை விட்டு விலகி கொனாரக் என்ற ஹெண்டிஜன் ரக கப்பலைத் தாக்கியது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அளித்துள்ள அந்நாட்டின் ஊடகம், கொனாரக் பயிற்சி கப்பலானது 2018இல் மாற்றியமைக்கப்பட்டு ஏவுகணைகளை செலுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. டச்சு நிறுவனம் தயாரித்த, 47 மீட்டர் (155 அடி) நீளம் கொண்ட இந்தக் கப்பல் 1988 முதல் சேவையில் இருந்துவந்தது.
ஈரானிய ராணுவப் பயிற்சிகளின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து அரிதாகவே செய்தி வெளியிடும் அந்நாட்டின் ஊடகம், தற்போது இந்த விபத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை வைத்தே இந்த விபத்தின் தீவிரத்தை அறிந்துகொள்ளலாம்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதோடு, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதனால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டிற்கு இடையில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு!