ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்கு சிரியாவை மீட்டெடுக்க அமெரிக்கா கடந்த 2014ஆம் முதல் போராடி வந்தது. அமெரிக்கப் படைகளுக்கு துணையாக குர்து பேராளிகள் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படையினர் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திவிட்ட காரணத்தால் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நிலநிறுத்திப்பட்டிருந்த அமெரிகப் படையை திரும்பப்பெறுவதாகவும், தங்களுக்குப் பதிலாக அங்கு துருக்கிப் படையினர் செயல்படுவார்கள் என்றும் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
இதனால், குர்து பேராளிகள் சிரியாவில் தனித்துவிடப்பட்டுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் என்று கருதும் துருக்கி அரசு, அங்கு பாதுகாப்புப் படையினரை அனுப்பி நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு கவலை தெரிவித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "வடகிழக்கு சிரியாவில் துருக்கி மேற்கொண்டுவரும் தன்னிச்சையான ராணுவத் தாக்குதல் மிகவும் கவலைக்குரிய ஒன்று. துருக்கியின் செயல்பாடுகள் அப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையையும் சீரழிக்கக்கூடும். இதனால் மனித உரிமை மீறல், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதற்கும் வாய்ப்புண்டு" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிரியாவின் தாக்குதலுக்கு ஈரான், இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.